மாமாங்கம்




தமிழர் மதம், தமிழர் கடவுள், தமிழர்களின் இலக்கியங்கள், தமிழர்கள் அரசியல்
இவையாவும் காட்டுமிராண்டிக் காலத்தவை காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை என்று பல தடவை நீண்ட நாட்களாகவே நான் சொல்லி வருகிறேன். அதுவும் வீண் வெறும் வாய்ப்பேச்சாக மாத்திரம் அல்லாமல் அவ்வவற்றிற்கு ஏற்ப ஆதாரங்களை ஆராய்ந்து தக்க ஆதாரங்களுடனேயே சொல்லி வருகிறேன். நமது நாட்டில் மதப் பிரச்சாரக்காரர்கள், அரசியல் பிரச்சாரக்காரர்கள், செய்தி பிரசுரக்காரர்கள், பொதுத்தொண்டு செய்பவர்கள் முதலிய யாவருமே ஆயிரத்திற்கு 999 பேர்கள் வயிற்றுப் பிழைப்பிற்கும், சுயநலத்திற்கும், பதவி வேட்கைக்குமாகவே வாழ்பவர்களாக, வாழவேண்டியவர்களாக இருப்பதாலும் மேற்காட்டியவர்களின் பேரால் சிலர் மேல்ஜாதிக்காரர்களாய் வாழ்ந்து வருகிறவர்களாய் இருப்பதாலும் இப்படிப்பட்ட இவர்கள் (மேல்ஜாதிக்காரர்கள்) இடமே பத்திரிகைகளும்; அவர்களைப் பின்பற்றி நடத்தி வாழ்பவர்களிடமே பத்திரிகைகளும் இருந்து வருவதால் மேற்கண்ட நமது கருத்துக்கள் முயற்சிகள் சரிவர மக்களிடம் எட்டுவதில்லை.

மனிதன் எனில் மானத்தோடு வாழவேண்டும்

மனிதன் என்றால் முதலாவது மானமுள்ளவன் என்பதுதான் பொருளாகும்.

ஆனால், அதுதான் தமிழனுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆதலால், தமிழன் எதையும் விற்று, எதையும் செய்து வாழ்ந்து பழகினவனாகவும், அந்தப் பரம்பரையில் வந்தவனாகவும் ஆகிவிட்டதனால் தமிழர் சமுதாயத்திற்கே அடியோடு மானமில்லாமல் போய்விட்டது.

இந்த மானமற்றுப் போனநிலை தமிழ்ப் பத்திரிகைப் பிழைப்பினால் பிழைப்பவர்களிடமே பெரிதும் தஞ்சம் புகுந்துவிட்டபடியால் தமிழன் மேலும் மேலும் மானமற்றவனாகவும் மானமற்ற சந்ததிகளை உற்பத்தி செய்கிறவனாகவும் ஆகிவிட்டான்.

இந்த நிலை என்று மாறுமோ? எப்படி மாற்றப்படுமோ? என்பதை நினைத்தால் பெரிய இருட்டுத்தான் காணப்படுகிறது; இருட்டு மாத்திரமல்ல; பெரிய மயக்கம் ஏற்படுகிறது!
இன்று ஏன் இதைச் சொல்லி வேதனைப்படுகிறேனென்றால்,

மாமாங்க விழாக் கற்பனைகள்

கும்பகோணம் என்னும் நகரில் மாமாங்கம் என்னும் ஒரு திருவிழா (உற்சவம்) தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.

கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு ஒரு கதை மாத்திரமல்லாமல் பல கதைகள் ஆதாரங்களில் இருக்கின்றன! அவைகள் மித்திரன் தினமணி முதலிய பார்ப்பனர்களின் தினசரிகளிலும் கல்வி முதலிய வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக பிரசுரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அவைகளில் பண்டிகைக்கு பல விஷயங்கள் காரணமாகக் காட்டப்பட்டிருந்தாலும் எல்லா காரணங்களுக்கும் ஒரே மாதிரியான பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

அதென்னவென்றால், அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தக் குறிப்பிட்ட (மகாமக)க் குளத்தில் மூழ்கி எழுந்தால்  (குளித்தால்) குளிக்கும் எல்லா மக்களுடையவும், எல்லா பாவமும் நீங்கிவிடும். குளிக்கும் மனிதன் எப்படிப்பட்ட பாதகனாக - பாவியாக இருந்தாலும் சாபமற்றவனாவான். அவன் பாவங்கள் ஒழிவதோடு புண்ணியமும் செய்தவனாவான். அதாவது, குளித்தவன் மோட்சம் அடைவான். கைலாயம் செல்வான். வைகுந்தப் பதவி பிராப்தி அடைவான். சுவர்க்கலோகம் செல்வான் என்றெல்லாம் பலன்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஒரு முழுக்கினால் பாபம் தொலைந்து போகுமா?

கதைகள் ஒருபுறம் இருக்கட்டும்; மனிதன் செய்யும் அக்கிரமமான அயோக்கியத்தனமான மற்ற மக்களுக்கு கேடும், தொல்லையும் வேதனையும் தரும்படியான காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஏற்பட்ட பாவம் - (பாவத்திற்குரிய தண்டனை) ஒரு குளத்தில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டு குளித்துவிட்டால் தீர்ந்துவிடும்! பிறகு செய்யும் பாவத்திற்கும் புதுக்கணக்கு போட்டுவைத்து அடுத்த மாமாங்கத்தில் சரிசெய்து கொள்ளலாம் என்றால் மனிதன் எப்படி யோக்கியனாய் இருக்க முடியும்? எதற்காக யோக்கியனாய் இருக்க வேண்டும்? என்று தானே ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றியதால்தானே மனிதனிடம் யோக்கியதை காண்பது அரிதாய் இருக்க வேண்டியதாகிவிட்டது. மதங்கள் எல்லாம் மக்களை அயோக்கியர்களாக்கி வந்திருக்கிறது - வருகிறது என்பதற்கு இதுதானே காரணமாக  இருக்கிறது.

பிரார்த்தனையும் பாவமன்னிப்புமே மதத்தின் அடிப்படை

ஏனெனில், ஒவ்வொரு மதமும் நீ இன்ன காரியம் செய்தாய் உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகிவிடும்; நீ மாசற்றவனாக ஆகிவிடுவாய் என்றுதானே சொல்லி வருகிறது. ஏனென்றால், மனிதன் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் கடவுள்கள் எதற்கு? கோவில்கள் எதற்கு? உற்சவங்கள் எதற்கு? பண்டிகைகள் எதற்கு? பிரார்த்தனைகள், தொழுகைகள், கும்பிடுதல், பூசை முதலிய காரியங்கள் எதற்கு? என்று ஒரு யோக்கியன் அறிவாளி கேட்டால், பாவமன்னிப்புக்காரர்கள், என்ன பதில் சொல்ல முடியும்? மத நம்பிக்கை - கடவுள் நம்பிக்கைக்காரர்கள் பாவகாரியங்கள் எல்லாம் தங்களால்தான் செய்யப்படுகிறது. இதற்கும் கடவுள் சக்திக்கும் சம்பந்தம் இல்லை. அவனவன் செய்கையின் பலனை அவனவன் அனுபவித்தாக வேண்டும் என்று சொல்வதானாலும் எப்படிப்பட்ட பாவத்திற்கும் இன்னின்ன காரியங்களால் மன்னிப்பு இருக்கிறது என்று கூறிவிட்டால் மனிதன் எப்படி யோக்கியமாய் இருக்க முடியும்? என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

அரசியலில் யோக்கியரைக் காணமுடியவில்லையே

இதற்கு மற்றொரு உதாரணமாக அரசியலை எடுத்துக் கொள்ளலாம். இன்றைய தினம் அரசியலில் யோக்கியர்களைக் காண்பது ஏன் அதிசயமாக அபூர்வமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அரசியலில் ஈடுபட்டவன் எவனும் அயோக்கியத்தனம், அக்கிரமம், நாசமான - கேடான காரியம் செய்துதான் ஆகவேண்டும். இதை செய்துதான் ஆகவேண்டும் என்பதற்குக் காரணம், செய்தால்தான் தேசபக்தன், தியாகி, தேசியவாதியாகலாம். அப்படி ஆனால்தான் வயிற்றுப் பிழைப்பிற்கு வழி. பதவி, மந்திரி, கவர்னர், ராஷ்டிரபதி ஆவதற்கு வழி ஏற்பட முடியும். ஆனால், அந்த அயோக்கியத்தனம், அக்கிரமம், நாசம், கேடு ஆன காரியங்கள் செய்ததற்கும் பரிகாரம் என்னவென்றால் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தால் பரிகாரமாகிவிடுகிறது என்பதுதான். ஜெயில் பாவமன்னிப்புப் போன்றதே

ஜெயில் என்பது எப்படிப்பட்டது என்றால் இந்தப் பாவமன்னிப்பு சாதனங்கள் போன்றதுதான். மற்றும் சொல்லவேண்டுமானால், பாவமன்னிப்பு சாதனங்களைவிட மிகமிக எளிதானதுதான்.

ஆகவே, பாவமன்னிப்பு சாதனங்கள் எதையும் மனிதர்களை யோக்கியமாய், நேர்மையாய் நடந்துகொள்வதிலிருந்து பிறழத்தான் செய்யும் என்பது மாத்திரமல்லாமல் நல்ல மனிதர்களையும்கூட அயோக்கியமாக நடத்தத்தான் தூண்டும். மனித சமுதாயம் சீர்பட வேண்டுமானால் எந்த உருவத்திலும் பாவமன்னிப்பு இருக்கக் கூடாது. அரசியலிலும் எந்த லட்சித்தில் தவறு செய்தாலும் செய்தவனுக்கு மன்னிப்பே இருக்கக் கூடாது. ஏனென்றால், மூன்றாந்தர, நாலாந்தர நடத்தை உள்ளவர்கள் எல்லாம் தன்னை தேசபக்தன், தியாகி என்று காட்டி பதவிக்கு வர நேர்ந்தாலே எனது 40 ஆண்டு அனுபவத்தில் அரசியல் என்பது போராட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம், நாசம், கேடு, பலாத்காரம், மோட்சம், புரட்டு, போட்டி, ஒருவரையொருவர் வசை கூறுவது, பழி கூறுவது, கவிழ்க்கச் சூழ்ச்சி, அரசாங்கத்தை அதிகாரிகளை அலட்சியப்படுத்துதல் முதலிய காரியங்களாகத்தானே இருந்து வருவதாகத்தானே பார்க்கிறேன்.

மத இயல், அரசியல் இரண்டிலுமே நேர்மையாளர் காணவில்லையே?

அதுபோலவேதான் எனது 70 - 75 வருஷ அனுபவத்தில் எந்த பக்திவானிடத்திலும், நாமக்காரன் விபூதிக்காரனிடமும், நாணயம், நேர்மை பார்க்க முடியவில்லையே! எனக்கு அரசர்களைத் தவிர்த்து அவர்களுக்கு அடுத்து எல்லா பெரிய மனிதர்களையும், அரசியல் தலைவர்களையும் பதவியாளர்களையும் தெரியும். என் அனுபவத்தைத்தான் சொல்கிறேன். எதனால் இந்தத் தவறு செய்யும் நிலை ஏற்பட்டதோ, அதையே பின்பற்றும்படி நமது பின் சந்ததியை தூண்டும்படியான காரியங்களையே நாம் கடவுள், மதம், சாஸ்திரங்கள், புராணங்கள், இலக்கியங்கள், முன்னோர்கள் முதலியவற்றின் பெயரால் செய்து வருகிறோம். அப்படி செய்யப்படுபவைகளில் ஒன்றுதான் அடுத்து வரப்போகும் மாமாங்க உற்சவமாகும். ஒரு அரசியல்காரனுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. கம்யூனிஸ்ட்கள் என்பவர்களுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. நான்தான் பாராங்கல்லில் முட்டிக்கொள்பவர்கள்போல் ஏதோ இப்படி எல்லாம் உளறி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமாவது சிந்தித்துப் பார்க்கட்டும் என்பதற்குத்தான் இதை சொல்லுகிறேம்.


- விடுதலை - தலையங்கம் - 09-02-1968

நூல் - இதுதான் மகாமகம்
ஆசிரியர் தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

மகாமகம் கொள்ளை விழாவே!

மகாமகம்