மகாமகம் கொள்ளை விழாவே!




மதத்தின்பேரால் மக்கள் மடமையில் ஆழ்த்தப்படுவதுடன் அறிவை மட்டுமின்றி மக்கள் செல்வத்தையும் கொள்ளை கொள்ளையாக இழக்கச் செய்யும் பணிகளே தொடர்ந்து நடந்து வருவதற்கான இந்நாட்டு மக்கள் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து எப்போதுதான் மீண்டு ஏனைய நாட்டவர்களைப்போல் முன்னேற்றம் அடையப் போகிறார்களோ என்று ஏங்க வேண்டியுள்ளது. மனிதக் கற்பனையான கடவுள் எண்ணமும் அதற்கான கோவில்களும் சிலைகளும் எழுப்பி உற்சவங்கள், விழாக்கள் நடத்துதல் போன்ற அறிவும் பணமும் கொள்ளை போகும் சம்பவங்களே நமது நாட்டில் பெருகி வருகின்றன.

மனிதன் தான் செய்த பாவங்களைத் தொலைக்க கடவுளை நாடினான்! அதேசமயம், எல்லாம் கடவுள் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே பலவித பாவங்கள் புரிவதிலும் ஈடுபடுகிறான். பாவம் செய்தால் அதற்கேற்ற தண்டனை அனுபவிப்பு நிச்சயம் கிடைக்கும் என்று இருந்தால்தானே மேலும் அப்பாவ காரியங்களை செய்யாமல் இருக்கவும் பாவ காரியங்களை எண்ணாமல் இருக்கவும் முடியும் அப்படிக்கின்றி கடவுள் கருணையால் (பாவம் செய்யக் காரணமாக இருந்தால் கடவுளின் அருளால்) செய்த பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு, செயலுக்கான அனுபவிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புனிதனாவான் என்ற நம்புவான் ஆயின் அவன் எப்படி பாவகாரியங்களை மேலும் செய்யாமல் இருப்பான்? எனவே, பாவமன்னிப்பில் நம்பிக்கையூட்டி மனிதனை கடவுள் நம்பிக்கையில் ஆழ்த்துவதே மகாமகம் போன்ற விழாக்கள் ஆகும்! அறிவினால் சிந்தித்து செயல்படுவதற்கு இடமளிக்காமல் மதவாதிகள் சூழ்ச்சி செய்தவண்ணம் உள்ளனர்!

எண்ணித் துணிக கருமம் - துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு என்ற கருத்துப்படி எக்காரியத்தையும் சிந்தித்து மனித காரியத்திற்கு பாதகம் விளையாத செயலா? தமக்கும் இதர மக்களுக்கும் பயன் தருவதுதானா என்று கண்டறிந்த பிறகே செயல்படுவதாய் இருந்தால்தான் இவ்விதமான மடமை விழாக்கள் ஒருநாளும் நீடிக்காது. மக்கள் பகுத்தறிவுவாதிகளாகவே திகழ்வர்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் தமது பொதுவாழ்வில் லட்சியத்தையே பகுத்தறிவைப் பரப்புவதாகக் கொண்டு இந்தத் தள்ளாத வயதிலும் தம் உடல்நிலைக் கோளாறுகளையும் மறந்து பகுத்தறிவு ஊட்டுவதில் பாடுபட்டு வருகிறார்கள். மதத்தின் பேரால் கற்பனைச் சின்னங்களுக்கும் மதிப்பளிக்கப்படுவதால் வஞ்சகர்களும் அச்சின்னங்களின் திரைமறைவில் கொள்ளையும் சுரண்டலும் கணக்கின்றி செய்ய இயலுகிறது. அதற்காகவே அந்த சுரண்டலுக்காகவே நாடெங்கும் கோயில்களையும் விழாக்களையும் பெருக்கியவண்ணம் உள்ளன.

நாள்தோறும் பத்திரிகைகளில் மதவிழாக்களின் விளைவாக முறைகேடுகள் விபத்துகளுக்கு மக்கள் பலியாதல், கொள்ளைகள், தொற்றுநோய் பரவுதல் முதலிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆயினும், பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் நடந்துவந்தும்கூட மக்கள் விழிப்படையாமல் திருந்தாமல் காட்டுமிராண்டி நோக்கிலேயே இருந்து வருவதற்கு அறிவுள்ள மக்கள் அனைவரும் வருந்தாமல் இருப்பதற்கில்லை.

அலகாபாத் கும்பமேளாவில் மோட்ச முழுக்குப் போடவந்த நிர்வாண சந்நியாசிகளைக் காண முண்டியடித்துச் சென்று லட்சக்கணக்கில் பலியாயினர் சில ஆண்டுகளுக்கு முன்! அக்காட்சியைக் காண குடியரசுத் தலைவரே (ராஜேந்திரபிரசாத்) சென்றிருந்தார்.

பூரிக்கோயில் திருவிழாவுக்கு சென்றவர்கள் மூலம் ஒடிசா மாநிலம் முழுவதும் காலரா தொற்றி பல லட்சக்கணக்கில் மாண்டனர் சில ஆண்டுகட்கு முன்! வங்காளத்தில் பூரணிமா விழாவில் ஒரு தீவிற்கு மூழ்கச் சென்றவர் பல்லாயிரவர் அக்கடலிலேயே மூழ்கி இறந்தனர். சென்ற ஆண்டு! இவ்வாறு அடிக்கடி விபத்துகள் நடந்தும்கூட எல்லாம் கடவுள்செயல் என்று நம்புவதா? தம் பக்தர்களைக் கூட காக்க முடியாதது ஒரு கடவுள் எனப் போற்றத் தக்கதுதானோ? சிந்தித்துப் பார்த்தால்தானே அதன் சூட்சுமங்கள் புரியப் போகிறது! அடுத்த குடந்தையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று ஒரு குலத்தில் கடவுள் அருளால் நீர்ஊற்று உண்டாவதாகவும் அக்குலத்தில் மூழ்கியவர்களுக்கு பாவங்கள் முழுதும் கழிந்து புனித உருவெடுப்பார் என்றும் புரளி செய்யப்படுகிறது.

இம்மடமை குறித்து கடந்த வாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் மடமைத் திருவிழாவே இது என்பதை விளக்கி எழுதியுள்ளார்கள். இந்த மடமைத் திருவிழாவிற்கு அரசாங்கமும் ஆதரவு தருவது முற்றிலும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது. இவ்விழாவில் மக்களைத் திரட்ட புரோகிதர்களும் கொள்ளை லாபகர்த்தாக்களும் முனைந்துவிட்டனர். முடிச்சுமாறிகளும் பிக்பாக்கெட்காரர்களும் சூதாட்டக்காரர்களும் அரைநிர்வாண டான்ஸ் ஆட்டங்களும் ஏற்படுத்த முனைந்துவிட்டனர். மகாமகத்துக்கு குடந்தைக்குப் புறப்படுங்கள். விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று பலமாக விளம்பரங்கள் பத்திரிகைகள் மூலம் செய்யப்படுகின்றன. குடந்தையில் உணவுப் பண்டங்களின் விலைகள்கூட தாறுமாறாக ஏற்றி விற்கப்படுகின்றனவாம். இதை தடுக்க வேண்டியதும் அரசினர் கடமையல்லவா?

பகுத்தறிவு இயக்கத்தினர் இந்த சூதாடிகளின் வஞ்சகத்தன்மைகளை விளக்கி ஆங்காங்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்துதல் அவசியமாகும். இன்றேல் வழக்கம்போல் மக்கள் மடமையிலும் கோடிக்கணக்கான பண விரயத்திலும் நோய்நொடிகளிலும் வீழ்வர் என்பது திண்ணம். ஆங்காங்கு கழகத் தோழர்கள் மகாமக எதிர்ப்புப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும்படி மீண்டும் நாம் வேண்டிக்கொள்கிறோம்.


- விடுதலை - தலையங்கம் - 07.02.1968

நூல் - இதுதான் மகாமகம்
ஆசிரியர் தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

மகாமகம்