இதுதான் மகாமகம்



மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம் (மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடுகள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டு, ரயில்வேக்காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட்டகைகளையும் போடுகிறார்கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப்படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம் கட்டித் தொங்கவிட்டு, பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும்படி செய்தும், மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள்.

கும்பகோணம் - பார்ப்பனர்கள்

சாதாரணமாக கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத் தகுந்த விசேஷம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்குநாள் க்ஷீணதிசை அடைந்துவரும் தோற்றமுடைய பழங்கால முறைக்கட்டங்களையும் உடைய ஊராகும். அதில் வகிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும் மேல் ஜாதி மிராசுதாரர்களுமாகும்.

கும்பகோணப் பார்ப்பனர்கள் என்றால் மிக தந்திர சாலிகள் என்பார்கள். கும்பகோணம் மாத்திரமல்ல தஞ்சாவூர் ஜில்லா முழுவதுமே உள்ள பார்ப்பனர்கள் பழைய ராஜாவின் தர்மத்தினாலும், மற்றும் தஞ்சை ஜில்லாவிலேயே ஏற்பட்டிருந்த இரண்டு முதல்தர காலேஜினாலும் சாப்பாடும், கல்வியும் சுலபமாய் இருக்கும் இடத்திலேயே கிடைக்கக் கூடிய நிலைமை இருந்ததால் படித்துப்பட்டம் பெறவும், அதற்கேற்ற உத்தியோகங்கள் பெறவும் சவுகரியம் ஏற்பட்டு இந்த மாகாணத்தில் அவர்களே முக்கியமானவர்களாய் இருந்துவந்திருக்கிறார்கள். சுமார் 25 வருஷங்களுக்குமுன் தமிழ் நாடு மாத்திரமல்ல சென்னை மாகாணமுழுவதிலும் தஞ்சை ஜில்லா பார்ப்பனர்களே திவான்களாகவும், பிரபல வக்கீல்களாகவும் முன்சீப், ஜட்ஜு, டிப்டி கலெக்டர், போலீஸ், இன்ஸ்பெக்டர், சூப்பிரண்டுகளாகவும் மற்றும் பல பெரிய பதவி உடையவர்களாகவும் ஆக நேர்ந்து பிரபலமாகி விட்டார்கள். இந்தக்காரணங்களால் கும்பகோணம் பார்ப்பனர்களுக்கு அதிகமான விளம்பரம் ஏற்பட வசதியாகிவிட்டது. அங்குள்ள மிராசுதாரர்களும், ஏறக்குறைய பார்ப்பனர்களைக் காப்பியடித்து தங்களையும் மேல் ஜாதிக்காரர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிட்டார்களே தவிர, கல்வியில் அவர்களுடன் போட்டி போடவோ, உத்தியோகம் பெறவோ, முடியாத படி பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை வென்று முன்னேற முடியவில்லைஆதலால் பணம் சேர்ப்பதிலும், பூமியை பெருக்குவதிலும் மாத்திரம் கவலைகொண்டு ஆள் ஒன்றுக்கு 1000 வேலி 2000 வேலி என்பதாக நிலத்தை பெருக்கிக் கொண்டார்கள். இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல், ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதைத்தவிர மற்றபடி அந்த ஜில்லாவுக்கும், கும்பகோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள ஸ்தல புராணம்

ஆனால் மற்றொரு யோக்கியதையும் உண்டு, அது மேற் சொன்னவைகளை விட மிகவும் மோசமான யோக்கியதையேயாகும். அதென்னவென்றால் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு விசேஷ ஸ்தலங்களாகும். பாடல் பெற்ற ஸ்தலங்களாகவும், பூலோக வைகுண்டமாகவும், பூலோக சுவர்க்கமாகவும், மற்றும் இந்தியாவில்உள்ள முக்கிய புண்ணிய க்ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் என்பவைகள் எல்லாம் தஞ்சை ஜில்லாவிலேயே ஒவ்வொரு கிராமத்தில் ஒவ்வொன்று பிரதிபலிப்பதாக கதைகளும், புராணங்களும் கர்ணபரம்பரை விசேஷங்களும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் படித்துவிட்டு வெளியிடங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள செல்வங்களை கொள்ளைகொண்டு போய் சேர்ப்பது ஒன்று, கிராமங்கள் தோரும் புண்ணிய க்ஷேத்திரங்களும், பாடல்பெற்ற க்ஷேத்திரங்களுமாய் இருப்பதால் மற்ற ஊர்களில் இருக்கும் மூடர்கள் எல்லாம் பாடுபட்டுத்தேடிய பணங்களை மூட்டை கட்டிக் கொண்டுபோய் அந்த ஜில்லாவில் அழுதுவிட்டு வரும் மடத்தனம் இரண்டு, ஆகிய இவைகளால் மாத்திரமல்லாமல், மைசூர், குடகு தேசத்தில் இருந்து வரும். காவேரியானது சேலம் கோயமுத்தூர் ஜில்லா வழியாக வந்தாலும் சேலம் ஜில்லாகாரர்களுக்கு குடிப்பதற்குக்கூட மார்க்கமில்லாமல்  செய்துவிட்டும், கோயமுத்தூர் ஜில்லாக்காரருக்கு ஒரு செண்டு பூமிகூட பயிராவதற்கு உதவாமல் படி ஏமாற்றிவிட்டு எல்லா தண்ணீரும் நேரே தஞ்சை ஜில்லா சென்று. ஜனங்கள் வெளிக்கு போவதற்குக்கூட இடமில்லாமல் எல்லா நிலமும் நஞ்சை பயிராகும்படியும் செய்து கொண்ட சூழ்ச்சியால் ஏற்பட்ட லாபம் மூன்று. இந்தப்படியாக இயற்கை வளம் பெற்ற தஞ்சை ஜில்லாவுக்கு மகாமக விசேஷம் என்னும் ஒருபுரட்டு யோகமும் சேர்வதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்போது நாம் இதை ஏன் எடுத்துக்காட்ட வருகிறோம் என்றால், நமது மக்கள் இத்தனை காலம்தான் மூடர்களாய், மடையர்களாய், கடையர்களாய் இருந்து இவ்விதப் புரட்டுகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆளாகி, நஷ்டமும், கஷ்டமும், இழிவும், ஏமாற்றமும் அடைந்து வந்தோம் என்றாலும் இனியும் பாரம்பரியமாய் தலைமுறை தலை முறையாய் அடைய வேண்டுமா? என்பதை ஞாபகப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

மகாமக அற்புதம்!

தோழர்களே! மகாமகம் என்றால் என்ன? என்பதை சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல் பட்டு தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து, வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்து விட்டு எங்களிடத்தில் வந்து ஸ்தானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்து தீர்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள் அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொண்ட நாங்கள் எப்படி அவைகளை போக்கிக் கொள்ளுவது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் கும்பகோணத்திலே, தென்கிழக்கிலே ஒரு தீர்த்தம், உண்டு 12 வருஷத்துக்கு ஒரு முறை மாசி மாதம் மகாமக நாளன்று அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும் என்று சொன்னார்அதற்கு 9 கன்னிகைகளும் கும்பகோணம் எங்கே இருக்கின்றது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களை கும்பகோணத்திற்கு அழைத்துப் போகின்றேன் என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள். பரமசிவனார் அவர்களை காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று மகாமக குளத்தைக் காட்டி குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்த  கன்னிகைகளும் கும்பகோணத்திலேயே கோவில் கொண்டு விட்டார்கள். ஆதலால் இதில் அந்த காலத்தில் குளித்தவர்களுக்கு சர்வபாவமும் கலைந்து சர்வ மங்களமும் உண்டாகும் என்று கண்டிருக்கின்றது.

மடையர்கள் என்றால் கோபமேன்?

தோழர்களேஇதுதான் கும்பகோணஸ்தலமகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோவில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காக பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும் எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்த சாமியை எப்படி எப்படி கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.
இந்தக்கதையை ஆதாரமாக வைத்த இந்தமகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள் எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?
இந்த கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள விசேஷம் போலவே உலகத்தில் உள்ள அனேக சாக்கடைகளிலும், பட்டிக்காடுகளிலும், குப்பைமேடுகளிலும் உள்ள குழவிக் கல்லுகளுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும், குட்டைகளுக்கு மெல்லாம் புராணங்களும், கதை ஆதாரங்களும், ஐதீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இதுபோன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில் தான் அடங்கி இருக்கின்றன. அதாவது, 1. சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி விடும். 2. வேண்டியதெல்லாம் அடையலாம். என்கின்றவைகளேயாகும். இந்த இரண்டு காரியமும் யோக்கியமான காரியமாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்த பாவம் போகுமா?

மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாப காரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப்பாருங்கள்.

மனிதனுக்கு வேண்டிய - அவன் ஆசைப்படும் படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறுகாரியங்களால் கை கூடிவிடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி - நடத்தை - ஒழுக்கம் என்பவைகளுக்கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையரையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்தானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக்கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தை தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக்கொண்ட மகாமக தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உரு வெடுத்து எந்த குளத்தில் போய் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக்குளத்துக்குப் போய் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவப் புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம் ஸ்தலம் மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள்.

மற்றும் அந்த புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்கு பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்கு பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும் நடுமத்தியில் 660000000 அறுபத்தி ஆறுகோடி தீர்த்தம் இருப்பதகாவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப் பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்றும் பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதய நமது கேள்வி. மற்றென்னவென்றால் இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தேங்கிய நீர் தீர்த்தமா-

தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நதி என்றால் மழைபெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஒடை அல்லது நீர்ப்போக்காகும்.

குளம் என்றால் இந்தமாதிரி ஒடையில் இருந்து வழி வைத்து தண்ணீர் நிரப்புவதோ, அல்லது மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டுவந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதேதான். மற்ற குட்டித்தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குநீர் ஊற்றம் போன்ற ஊற்றேயாகும். இந்தத்தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு. மற்றபடி அவற்றில் ஒருமனிதன் செய்யும் பாவம் என்பதைப்போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்கு தெரியாதா? என்றுதான் கேட்கின்றோம்.

மாமாங்கக் குளம் என்றால் என்ன?

மாமாங்க குளம் என்பது மேல் கண்டமாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமக சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்து விட்டுவெறும் அடிவண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்த சேறானது கருப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடிசதுரம் இருக்கலாம். அடிமட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் லட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படி சாத்தியமாகும். அந்தக் குளத்தில் இறங்கி அந்த சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறித்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப்படி செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம். மிஸ் மேயோ நமது பழக்க வழக்கங்களைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் தீர்த்தங்களைப் பற்றியும் எழுதியதைப் பார்த்து கோபித்துக்கொண்டோம். ஆனால் இந்த மாதிரி சேற்றில் குளிப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று கருதி இருக்கிற முட்டாள் தனமான பேராசைக்காக நாம் வெட்கப் படுவதில்லை. என்றால் பிறகு எந்த விதத்தில் நாம் அறிவாளிகள், யோக்கியர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாமாங்கத்தால் எத்தனை லட்ச ரூபாய் இரயில்காரன் கொள்ளையடிக்கப் போகிறான்? எத்தனை லட்ச ரூபாய் பார்ப்பான் கொள்ளை அடிக்கப் போகிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அம்மை, காலராவுக்குப் பலியாவதோ?

இவை ஒரு பக்கம் இருப்பதோடு கூட்ட நெருக்கடியில் உயிர்ச்சேதம் எவ்வளவு, திருட்டு எவ்வளவு, இவை தவிர இப்பொழுதே அங்கு கும்பகோணத்தில் - காலராவும் அம்மையும் வந்து விட்டது. இதற்காக கொட்டகை கட்டி அங்கு கட்டிலும் படுக்கையும் போட்டாய்விட்டது. பிளேக்குக்கும் கொட்டகையும் போட்டாகி விட்டது. அதுவும்தான் தன் பாவத்தைத் தீர்த்துக்கொள்ள அங்குவரப் போகின்றது. சுடுகாட்டுக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்து அங்கு சில குழிகளும் தயாராய் முனிசிபாலிடியார் வெட்டி வைத்திருக்கிறார்கள்.

கும்பகோணத்துக் கொசுக்களோ அந்த ஊர் பார்ப்பனர்களையும் குச்சிக்காரிகளையும் விட எத்தனையோ பங்கு மோசமானவைகள் என்று சொல்லலாம். ஏனெனில் இது அவர்களைவிட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்துக் கொண்டு இருக்கின்றது. மாமாங்கத்துக்கு போய் வந்தவனுக்கு வரப்போகின்ற மலேரியா காய்ச்சல் அடுத்த மாமாங்கம் வந்தா லொழியதீராது. இந்த நிலையில் உள்ளமகாமகம் என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.


- குடிஅரசு - தலையங்கம் - 12.02.1933

மாமாங்கம்

கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மாமாங்க விஷயமாய் சென்ற வாரம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்மந்தப்ட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படுகின்றது என்றாலும், அது பெரிதும் சுயநலக்காரர்களாகிய முதலாளிமார்கள், சோம்பேறி வாழ்க்கைக்காரர்கள் ஆகிய இருகூட்டத்தாரின் விளம்பரங்களின் மூலமாகவே அது பிரபலப்பட்டு மக்கள் அதில் ஈடுபடுகின்றார்கள். மாமாங்கத்தை விளம்பரம் செய்யும் இவர்கள் மூன்று வகையா வார்கள். ஒன்று பார்ப்பனர்கள், இரண்டு வியாபாரிகள், மூன்று ரயில்வேக்காரர்கள். இம்மூவருக்கும் அனுகூலக்காரராகவும் கூலிக்காரராகவும் இருக்கும் சில பத்திரிகைக்காரர்கள் மூலமே அதிக விளம்பரமாகின்றது.

இதன் பயனாய் மாமாங்கத்திற்கு பல ஜனங்கள் வருவார்கள் என்று நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், சூதாட்டக்காரர்கள், விபசாரக் குச்சிக்காரிகள் மற்றும் முடிச்சவிழ்க்கும் (சட்டைப்பை) திருடர், தந்தித்திருடர், கத்திரிக்கோல் திருடர், முதலிய திருட்டு வகைக்காரர்களும் ஏராளமாய் வந்து, தங்கள் தங்கள் தொழில்களை நடத்துவார்கள். அங்கு ஏற்கனவே  உள்ள சாராயக்கடைகளிலும் வெகு நெருக்கடியாய் வியாபாரம் நடக்கும். இவைகள் தவிர அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் முதலிய ஆகாரத்திற்கு அவசியமாய் வேண்டிய சாமான்களாக இல்லாமல் வேறு அநேகவித சாமான்கள் அதாவது விளையாட்டு சாமான்கள், வேடிக்கை சாமான்கள், அதிசய சாமான்கள், அற்புத சாமான்கள் பிரபுக்கள் வீட்டில், மகாராஜாக்கள் வீட்டில் இருக்கத்தக்க சாமான்கள் ஆகிய போக போக்கிய சாமான்களே ஏராளமாய்வரும்.

இவை தவிர காப்பிக் கடை, சோத்துக் கடை இவைகள் புதிய புதிய பெயர்களால் நன்றாய் விளம்பரம் செய்யப்பட்டு, எச்சில் மீது எச்சில் படிந்து, எச்சில் குளத்தில் சாப்பிடுவது போல் ஓட்டல்கள் விளங்கும். இவைகள் தவிர காலரா, மலேரியா, இன்புளுயன்சா, அம்மை, பிளேக்கு முதலிய தொத்து நோய்களும் உண்டாகும் மற்றும் கூட்ட நெருக்கடியில் பலர் நசுக்குண்டு சாகலாம்.

இவைகள் தான் மேல் கண்ட விளம்பரங்களால் ஏற்படும் பயனே தவிர வேறு என்ன ஏற்படக்கூடும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மாமாங்க சம்பந்தமான இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பாமரஜனங்களுக்கு எச்சரிக்கை செய்ததற்காக மிக மிக கோபங்கொண்டு மெயில் பத்திரிக்கையில் அதன் நிரூபர் ஒரு சேதி எழுதி இருக்கிறார் அதன் சுருக்கமாவது

சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சில காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து மகாமக பகிஷ்காரம் செய்யப் புறப்பட்டு சில துண்டுப் பிரசுரங்கள் மாயவரத்திலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். ஏனென்றால் சுயமரியாதைக்காரர்களை நாஸ்திகர்கள் என்றே ஜனங்கள் கருதுவதால் இவர்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். அன்றியும் இவர்கள் இப்படிச் சொல்லுவதாலேயே அனேகம் பேர் மாமாங்கத்துக்கு வருவார்கள், ஆதாலால் சுயமரி யாதைக்காரர் வேலை பயன்படாது என்று எழுதப் பட்டிருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்பதி னாலேயே அவர்கள் நல்லது சொன்னாலும் கூட ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்கின்ற தைரியம் மெயில் நிருபருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரிய வில்லை. நாஸ்திகர் அல்லாதவர்கள் அவ்வளவு பெரிய மூடர்கள் என்று மெயில் பத்திரிகையின் நிரூபர் கருதி இருப்பது அவரைத்தான் ஏமாற்றமடையச் செய்யுமேஒழிய மற்றபடி சுயமரியாதைக்காரரை ஒன்றும் செய்து விடாது.

மாமாங்கத்திற்கு ஜனங்கள் போவதினால் சுயமரியாதைக் காரருக்கு நஷ்டம் ஒன்றும் இல்லைமாமாங்கத்திற்கு ஜனங்கள் போகாமல் இருந்து விடுவதால் சுயமரியாதைக்காரருக்குலாபம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை. கால தேச நிலைமையை உத்தேசித்து இந்த மாதிரி முற்போக்குள்ள காலத்தில் எங்கோ ஒரு சுகாதார மற்ற ஆபாச ஊரில் உள்ள ஒரு சேற்றுத் தண்ணீரில் குளிப்பதற்காக மக்கள் 10, 20, 100, 200, ரூபாய் வீதம் செலவு செய்து கொண்டு போய், பலவித துன்பங்களையும் நோய்களையும் சம்பாதித்துக் கொண்டு வருவது அறிவுடமையா? என்ற கருத்தின் மீது தான் இந்தப் பிரச்சாரம் செய்கிறார்களே ஒழிய வேறு காரியம் ஒன்றும் இல்லை. இந்திய மக்களுடைய - (சிறப்பாய்) தென்னாட்டு மக்களுடைய பகுத்தறிவை அளப்பதற்கு இந்த கும்பகாண மாமாங்கமே ஒரு முக்கிய அளவு கருவி என்றே நினைக்கின்றோம்.

அன்றியும் இதுவரை செய்து வந்த பகுத்தறிவு பிரச்சாரமானது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதையும் அறிய இது ஒரு சந்தர்ப்பமும் ஆகும். தவிர ஆங்காங்குள்ள பகுத்தறிவு சங்கத்தாரும், சுயமரியாதைச் சங்கத்தாரும், அதன் சார்புடைய மற்ற சங்கத்தாரும், தேசியவாதிகள் என்பவர்களும் இந்த மாமாங்கப் புரட்டைப்பற்றி பாமர ஜனங்களுக்கு நன்றாய் விளக்கிப் பிரச்சாரம் செய்து அவர் களை இந்த மாதிரியான கஷ்டத்தில் இருந்தும், நஷ்டத்தில் இருந்தும் மீட்பார்களாக

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.02.1933

மாமாங்கத்தின் அற்புதம்
- சித்திரபுத்திரன் -

புராண மரியாதைக்காரன் கேள்வி
:- அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.
சுயமரியாதைக்காரன் பதில்:-

என்ன அற்புதமய்யா?

 பு.    :- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்தபோதிலும்கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.    :- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லு கிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-    :- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.    :- இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறையவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.

பு.     ;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.    :- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை
- குடிஅரசு - உரையாடல் - 26.02.1933

நூல் - இதுதான் மகாமகம்
ஆசிரியர் தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

மகாமகம் கொள்ளை விழாவே!

மகாமகம்