மகாமகம் (பகிஷ்கார சபை காரியதரிசி எழுதுவது)



இந்த மார்ச்சு மாதத்தில் கும்பகோணம் மகாமகம் நடை பெறுகிறது. பெற்ற தாய் தட்டு பிச்சை வாங்கும்போது மகன் மகேஸ்வர பூஜை செய்வதென்ற பழமொழியைப் போல் கும்பகோணம் மகாமகத்தின் சம்பவமும் இருக்கிறது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பஞ்சம், பஞ்சம் என்ற பேச்சாகவே இருக்கிறது. அய்யோ பசிக்கிறது. பிச்சாந்தியாகி என்ற சத்தமே எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. கிஸ்தி செலுத்துவதற்கு வழியில்லை கலம் நெல் 12 அணாவே விற்கிறது. மற்ற தானிய விலைகளும் குறைந்துவிட்டதால் நாட்டு மக்களுக்கு  ஏற்பட்டிருக்கும் பணப் பஞ்சத்தை சொல்ல வேண்டியதில்லை. நாட்டின்  நிலை இவ்விதமிருக்க ரயில்வே கம்பெனியும், கண்காட்சி சபைகளும், டிராமாக்களும், விபச்சாரிகளும், கும்பகோணம் மகாமகத்துக்கு நல்வரவு கூறி அழைப்பதின் உள் ரகசியமென்ன? எல்லாம் காசுபறிக்கும் வித்தையே என்பதை சொல்ல வேண்டியதில்லை. கும்பகோணம் மகாமகத்தில் கிடைக்கும் பாவ யுண்ணியத்தைப் பற்றி, வெள்ளைக்காரனின் ரயில்வே கம்பெனிக்கும், டிராமாக்காரனுக்கும் கண்காட்சி சபைக்கும்,

விபச்சார விடுதிகளுக்கும், என்ன தெரியும்? ஏராளமான விபச்சாரிகள், விபச்சாரத் தொழில் புரிய கும்பகோணம் வந்து தினம், தினம் குமிகின்றார்களே! ரயில்வேக்காரர்கள் ஏராளமான விளம்பரம் செய்கின்றார்களே! கண்காட்சி சபைமூலமாக  (All India Exibition)  இந்து பத்திராதிபர் உள்பட படித்த உலக ஞானமறிந்த பிரபலஸ்தர் மகாமக உத்சவத்தை விளம்பரப்படுத்துகிறார்களே! இதெல்லாம் எதற்கு? மகாமகபக்தி மக்களுக்குப்புகட்ட ரயில் கம்பெனியும், கண்காட்சி சபை, டிராமாவும் விபச்சார விடுதி போன்ற தரகர்களா வேண்டும்? ஆகவே எல்லாம் ஜனங்களின் கைப்பொருளை பரிப்பதற்கு செய்யப்படும் சூழ்ச்சி என அறிய வேண்டும் வருகிற மாமகத்தைப் பொறுத்து ஜனங்கள் ஜாக்கிரதையாக வேண்டும். கும்பகோணத்துக்கு போகும்படி ஏற்படும்ரயில்வே சிப்பந்திகளுக்கும், போலீஸ் சிப்பந்திகளுக்கும் இப்போதிருந்தே ((Vaccination) அம்மை குத்துதல் (Anti cholera injection)  காலராவினால் பீடிக்கப்படாமல் இருக்க வேறு ஊசி போட்டுக் கொள்ளுதல் (Anti Typhoyd and Malerial Injection)  டைப்பாய்ட், மலேரியா, முதலிய முறை காய்ச்சல்கள் வராமல் ஊசிபோட்டுக் கொள்ளுதல் முதலிய முன் எச்சரிக்கையான சிகிச்சைகளை செய்து வருகிறார்கள். போலீஸ் சிப்பந்திகளுக்கும், ரயில்வே சிப்பந்திகளுக்கும் மகாமகத்து  கிளப்புகளிலே,
வேறு தனிப்பட்ட இடங்களிலோ சாப்பாடு முதலியவைகள் எடுத்துக் கொள்ளக் கூடாதென்று கண்டிப்பான உத்திரவு செய்யப்பட்டிருக்கிறது. மேல் கண்ட சிப்பந்திகளுடைய சாப்பாடு வசதிகள் எல்லாம் மகாமக கூட்டம் கூடும் கும்பகோணம் எல்லைக்கு வெளியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சென்ட்ரல் ஸ்டோரிலிருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே கம்பெனியாரும் போலீஸ் சிப்பந்திகளும் தங்கள் சிப்பந்திகளுக்கு ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை பொது ஜனங்களும் சிந்திக்கவேண்டும். மகாமகத்தில் கூடும் பல லட்சக்கணக்கான ஜனங்களால் கண்டிப்பாய் மேலே விவரிக்கப்பட்ட வியாதிகள் வந்து சேருமென்ற முடிவின் பேரிலேயேதான் தங்கள் சிப்பந்திகளுக்கு ஆரம்ப சிகிச்சைகளை முன் ஜாக்கிரதையுடன் செய்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் நன்கு அறியவேண்டும். மகாமகத்துக்குப் போவதால் கண்டிப்பாய் அம்மை, காலரா, டைப்பாய்ட், மலேரியா போன்ற வியாதிகள் வரும் என்பதை ரயில்வே கம்பெனியாரும் போலீசாரும் பூரணமாக உணர்ந்து தங்கள் சிப்பந்திகளுக்கு முன்ஜாக்கிரதை செய்வது போல இதர ஜனங்களை அம்மாதிரி கருதாமல் மகாமகத்துக்கு ஆசி கூறி அழைப்பது வருந்தத்தக்கதேயாகும்.

ரயில்வே கம்பெனியாராவது தங்கள் வருமானத்தையே குறியாகக்கொண்டு செய்கிறார்கள் என்று சொல்லலாம். போலீஸ், கும்பகோணம் முன்சிபாலிட்டி போன்றைவைகளும் இதன் உண்மையை பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லாததை பார்க்கும்போது வருந்தாமலிருக்க முடியவில்லை. இந்தக் கூற்றுகளை உணர்ந்து கொண்டும், தெரிந்து கொண்டுமிருக்கிற பொதுஜன தலைவர்களும் மவுனம் சாதிப்பது ஆச்சரியமேயாகும். இவைகளை பொதுஜனங்கள் ஆழ்ந்த கருத்தோடு யோசனை செய்து கும்ப கோணத்துக்கு போவதில்லை என்று பிடிவாதமாக முடிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி போய்த்தானாக வேண்டுமென்று முடிவு செய்கிறவர்கள், அம்மை, காலரா, போன்ற வியாதிகள் வராதபடி போலீசாரும், ரயில்வே கம்பெனி சிப்பந்திகளும் செய்து கொள்வதேபோல் ஊசி போட்டுக் கொண்டாகிலும் போகும்படி விண்ணப்பித்துக் கொள்கிறோம். அதோடு கும்பகோணத்துக்கும் போகவேணுமாய் பிடிவாதங் கொள்கிறவர்களுக்கு தாழ்மையாக ஒன்றை தெரிவித்துக் கொள்கிறோம்! அதாவது:-

கடந்த மகாமகத்தில் எத்தனை பேர்கள் காதறுபட்டவர்கள், அடி உதைபட்டவர்கள், மூட்டை பறிகொடுத்தவர்கள், பெட்டி பறிகொடுத்தவர்கள், கழுத்து மணி பறி கொடுத்தவர்கள் என்பதை போன மகாமகத்தின் போலீஸ் நிர்வாக அறிக்கையும், பார்ப்பதோடு கர்ப்பத்தோடு கலங்கியவர்களும், கைக்குழந்தைகளோடு  நசுக்கப்பட்டவர் களும், மனைவி மக்களை விட்டு பிரிந்தவர்களுள் எத்தனை பேர்கள் என்பதையும் போய்வந்தவர்களை விசாரித்துப் பாருங்கள். அதோடு காலராவிலும் கூட்டத்திலும் இறந்தவர்கள் எத்தனை பேர்களுக்கு சர்க்கார் கொள்ளி வைக்கும்படி நேரிட்ட தென்பதை விசாரியுங்கள். இவைகளை எல்லாம் நன்கு விசாரித்துக் கொண்டு போவதென்பதும், போவதில்லை என்பதும் முடிவு செய்து கொள்ளுங்கள் வருவதைச் சொன்னோம்! கேட்டால் கேளுங்கள் இல்லாவிட்டால் விடுங்கள்.

கும்பகோணத்தின் மகாமக குளத்தின் நிலைமை வெளியூர் வாசிகளுக்கு தெரியாததே பலர் மகாமகம் என்றதும் வந்து விடுகிறார்கள். ஆகவே அக்குளத்தின் நிலைமையையும் கொஞ்சம் சொல்லி விடுகிறோம். அக்குளத்தின் ஆபாசம் தெரிந்தாலே ஒருவரும் போக மாட்டார்கள்! போகவும் மனம் சகிக்காது. கும்பகோணத்தை சேர்ந்த சுற்று பிரதேசங்களில் இருப்பவர்கள் அக்குளத்தை எப்போதும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அக்குளத்தை பார்த்தாலே வாந்தி எடுக்க நேரிடும்

உள்ளூர் குடும்பஸ்தர்களும், சுகாதார முறை தெரிந்தவர்களும் மகாமககுளத்தில் மல உபாவதைக்குப் போனால் காலைக்கூட கழுவுவது கிடையாது. மகாமகக் குளத்தைச் சுற்றிய நாலு வீதிகளிலும் உள்ள கிளப்புகள், வீடுகள் இவைகளிலிருந்து விழும் எச்சிலைகள் சதாசர்வகாலமும் அக்குளத்தில் மிதந்து கொண்டிருக்கும். சுருங்கச் சொன்னால் அக்குளத்தை கும்பகோணம் குப்பைத்தொட்டி என்று சொல்வது தான் சாலவும் பொருந்தும்! ஆகவே இந்த உண்மைகளை நன்கு பரிசீலனை செய்து நடந்து கொள்ள வேண்டுமாய் பொதுஜனங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.


- குடிஅரசு - கட்டுரை - 05.03.1933

நூல் - இதுதான் மகாமகம்
                                                ஆசிரியர் - தந்தை பெரியார்

Comments